உங்கள் கிரெடிட் கார்டைப் பற்றி உங்களுக்கு தெரியுமா!

9 May, 2017

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம், அவர்களுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டையே `கிரெடிட் கார்டு’. வாடிக்கையாளர் ஒருவர், இதைப் பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கவோ அல்லது சேவையைப் பெறவோ இயலும்.

ஒரு வாடிக்கையாளர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை முன் பக்கம், பின் பக்கம் என இரண்டு பக்கங்களிலும் பல தகவல்கள் உள்ளன. முன் பக்கத்தில் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்தின் பெயர், வணிகச் சின்னம், க்ளியரிங் நெட்வொர்க்கின் பெயர் (விசா அல்லது மாஸ்டர் கார்ட்), கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், அந்த கார்டு காலாவதியாகும் தேதி போன்ற பல தகவல்கள் இருக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கம், கறுப்பு நிறக் காந்தப்பட்டை இருக்கும். இது மிகவும் முக்கியமானது. இந்தக் காந்தப்பட்டையில் கிரெடிட் கார்டு வாங்கியவரின் பெயர், கார்டின் எண், கார்டு செல்லுபடியாகும் காலம், கடன் எல்லையின் அளவு, கார்டு வெரிஃபிகேஷன் கோட், வங்கி குறித்த தகவல்கள்… எனப் பல விவரங்கள் இருக்கும். ஆனால், இந்தக் காந்தப்பட்டையில் `வாடிக்கையாளரின் ரகசியக் குறியீட்டு எண்’ எனச் சொல்லப்படும் பின் (PIN) நம்பர் இருக்காது.

கிரெடிட் கார்டு என எடுத்துக்கொண்டாலே, அதில் 16 இலக்க எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதில் முதல் இலக்கம் க்ளியரிங் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. அதாவது, கிரெடிட் கார்டின் முதல் இலக்க எண் `3′ ஆக இருந்தால், அது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அல்லது டைனர்ஸ் க்ளப் போன்ற பயண உதவி நிறுவனங்களால் வழங்கப்பட்டது. இதுவே கிரெடிட் கார்டின் முதல் இலக்க எண், `4′ ஆக இருந்தால், அது விசா நிறுவனத்தால் வழங்கப்பட்டது. `5′ ஆக இருந்தால், அந்த கார்டை மாஸ்டர் கார்ட் நிறுவனம் வழங்கியது என்றும், `6′ ஆக இருந்தால், டிஸ்கவர் என்ற நிறுவனம் வழங்கிய கார்டு என்றும் பொருள்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, மற்ற எண்கள் வங்கியின் பெயர், பிராந்தியம் மற்றும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களைக் குறிக்கும்.

கிரெடிட் கார்டின் பின் பக்கத்தில் உள்ள காந்தப்பட்டையின் அருகில் வாடிக்கையாளர் கையொப்பம் இடுவதற்கான பகுதி ஒன்று இருக்கிறது. இந்தக் கையொப்பம் எதற்கு என்று தெரியுமா? நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால், அவர்கள் வழங்கும் பில்லில் உங்களுடைய கையெழுத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்தக் கையெழுத்து பயன்படுகிறது.

.

கிரெடிட் கார்டில் கையெழுத்திடும் இடத்தின் அருகில், மூன்று எண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த எண்கள் `Customer Verification Value (CVV) எண்’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த எண், கிரெடிட் கார்டைப் பாதுகாக்கும் ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது. கிரெடிட் கார்டு மூலமாக இன்டர்நெட் வழியே பொருள்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டின் முன் பக்கத்தில் உள்ள எண்ணோடு, இந்த CVV எண்ணையும் பயன்படுத்தியே பொருள்களை வாங்க முடியும். இந்த எண் மிக மிக அவசியம்.

ஏனெனில், உங்களுடைய கிரெடிட் கார்டில், முன் பக்கம் மற்றும் பின் பக்கம் உள்ள இரண்டு எண்களையும் தெரிந்துகொண்டு, யார் வேண்டுமானாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இன்டர்நெட் மூலம் பொருள்களோ அல்லது சேவைகளையோ பெற முடியும். ஆகையால், கிரெடிட் கார்டைக் கொஞ்சம் கவனத்துடன் பயன்படுத்துவது நல்லது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கிரெடிட் கார்டை பெயர் தெரியாத, சிறிய நிறுவனங்களில் எல்லாம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதுபோன்ற ஒரு சில நிறுவனங்கள் மோசடி நிறுவனங்களாக இருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டில் Expiry Date, CVV போன்ற விவரங்களைக் கண்ட இடங்களில் எழுதிவைக்காமலும், யாரிடம் சொல்லாமலும் இருப்பது நல்லது.

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையின் போது மொபைல் எண்ணில் கிடைக்கப் பெறும் OTP எண்ணைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *