தொழிற்சாலையை திறந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

12 Sep, 2017

திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவத்தை தோட்டத்தில் இதுவரை நன்கு இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடிவிட அத்தோட்ட நிர்வாகம் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து அத்தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 180 தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பிலும் ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

11.09.2017 அன்று முதல் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிபகஷ்கரிப்பு தொடர்ச்சியாக 12.09.2017 அன்று வரை நீடித்துள்ளது.

இந்த நிலையில் பணிபகஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக 12.09.2017 அன்று காலை ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒன்பதாவது தடவையாகவும் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்று சிறந்து விளங்கிய தொழிற்சாலையை காரணங்களை தெளிவுப்படுத்தாமல் மூடிவிட ஒருபோதும் இடமளியோம் என தொழிலாளர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக சொழிற்சங்கங்களின் கவனத்திற்கும் தோட்ட கமிட்டிகள் கொண்டு வந்துள்ளனர்.


ஆனால் தனி ஒரு தொழிற்சங்கம் ஊடாக இப்பிரச்சிணையை தீர்க்க மக்கள் தயாராக இருந்தால் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரப்படும் இல்லையேல் முடியாது என தொழிற்சங்கம் ஒன்று தெரிவித்ததையடுத்து தோட்டகமிட்டிகள் திரும்பி வந்தாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அப்பால் இப்பிரச்சினையை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கவனத்திற்கு கொண்டுவர தொழிலாளர்கள் கையொப்பமிட்ட தொலைநகல் மற்றும் தந்தியை 12.09.2017 அன்றைய தினம் அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக தொழிலாளர்களின் தோட்டக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

கெலிவத்தை தோட்ட தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகள் கடந்த 01.09.2017 அன்று முதல் தோட்ட நிர்வாகத்தினால் முடக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழிற்சாலையில் அரைக்கப்பட்டு வந்த தேயிலை கொழுந்து கொட்டகலை ஸ்டோணிகிளிப் மற்றும் போகாவத்தை தோட்டப்பகுதி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய 80 தொழிலாளர்களின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள் தொழிற்சாலை இயங்காவிட்டால் எதிர்காலத்தில் கெலிவத்தை தோட்டத்தின் தேயிலை தோட்ட தொழில் செயழிலந்து விடும் எனவும் தெரிவித்தனர்.

எனவே தொழிற்சாலையை தொடர்ச்சியாக திறந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வரை நாம் போராடுவோம் என தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *